Search This Blog

Thursday, 28 January 2021

திருமந்திரம் -- பாயிரம் 1

திருமந்திரம் -- பாயிரம் 1 -- கடவுள் வாழ்த்து:

🌟🌟🌟🌟🌟

ஒன்றவன்‌ றானே இரண்டவன்‌ இன்னருள்‌ 

நின்றனன்‌ மூன்றினுள்‌ நான்குணர்ந்‌ தான்‌ஐந்து 

வென்றனன்‌ ஆறு விரிந்தனன்‌ ஏழும்பர்ச்‌ 

சென்றனன்‌ தான்‌இருந்‌ தான்‌உணர்ந்‌ தெட்டே. 

🌟🌟🌟🌟🌟

விளக்கம்‌

1⃣ இறைவன்‌ ஒருவனே  அவரைத்தவிர வேறு தெய்வங்கள்‌ இல்லை. அதாவது, உலகத்தில்‌ உள்ள அனைத்து தெய்வங்களும்‌, அண்டசராசரங்களும்‌, அதிலுள்ள அனைத்தும்‌ இறைவன்‌ ஒருவராகவே 1️⃣ இருக்கின்றான்‌. 

⭐⭐

2⃣ ஒன்றாக இருக்கும்‌ இறைவனின்‌ அருளானது இரண்டாக 2️⃣ இருக்கின்றது, அசையா சக்தியான இறைவனின்‌ அருள்‌ அவனிடமிருந்து அசையும்‌ சக்தியாக வெளிப்படுகிறது. அதாவது, எப்படி கசப்பான மருந்தும்‌ இனிப்பான மருந்தும்‌ நோயைக்‌ குணப்படுத்துகிறதோ அதுபோலவே இன்பம்‌ துன்பம்‌ ஆகிய இரண்டும்‌ இறைவனின்‌ அருளாகும்‌. 

⭐⭐⭐

3⃣ இரண்டாக இருக்கும்‌ இறைவனே பிரம்மன்‌, விஷ்ணு, சிவபெருமான்‌ ஆகிய மூன்று 3️⃣ தெய்வங்களாகவும்‌ நின்று படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ ஆகிய மூன்றுவிதமான தொழில்களையும்‌ புரிகின்றான்‌. 

⭐⭐⭐⭐

4⃣ மூன்றாய்‌ நின்ற இறைவனே, உயிர்கள்‌ தன்னை அறிந்துக்கொள்ள வேண்டும்‌ என்கிற மாபெரும்‌ கருணையில்‌, ரிக்‌, யஜூர்‌, சாம, அதர்வண ஆகிய நான்கு 4️⃣ விதமான வேதங்களாகவும்‌ நிற்கின்றான்‌. 

⭐⭐⭐⭐⭐

5⃣ நான்கு வேதங்களாக இருக்கும்‌ இறைவனே நிலம்‌, நீர்‌, காற்று, நெருப்பு, ஆகாயம்‌ ஆகிய ஐந்து 5️⃣ பூதங்களகவும்‌ இருக்கின்றான்‌. அதாவது, தெய்வம்‌ அருளும்‌ ஐந்து வகை தொழில்களாகிய, படைத்தல்‌, காத்தல்‌, மாயையால்‌ மறைத்தல்‌, அருளல்‌, மாயையை அழித்தல்‌, ஆகிய ஐந்தின்‌ தலைவன்‌ அவன்‌ ஒருவனே. 

⭐⭐⭐⭐⭐⭐

6⃣ ஐம்பூதங்களாக இருக்கும்‌ இறைவனே, உயிர்களின்‌ உடலில்‌ மூலாதாரம்‌, சுவாதிட்டானம்‌, மணிப்பூரகம்‌, அநாகதம்‌, விசுத்தம்‌, ஆஞ்ஞை ஆகிய ஆறு 6️⃣ சக்கரங்களாக விரிந்து இருக்கின்றான்‌. 

⭐⭐⭐⭐⭐⭐⭐

7⃣ ஆறு சக்கரங்களாக விரிந்திருக்கும்‌ இறைவனே, மூலாதாரத்தில்‌ குண்டலினி சக்தியாக இருந்து யோகங்கள்‌ புரிவதன்‌ மூலம்‌ ஆறு சக்கரங்களுக்கும்‌ மேலேறி ஏழாவது 7⃣ சகஸ்ரரதளத்திற்கு சென்று அதையும்‌ தாண்டி பரவெளியில்‌ உறைந்திருக்கின்றான்‌. 

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

8⃣ ஏழு சக்கரங்களிலும்‌ உறைந்திருக்கும்‌ இறைவனை தனக்குள்ளே உணர்ந்து உயிர்கள்‌ அவனை எட்டுதலே முக்தியாகும்‌.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷



No comments:

Post a Comment